முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர்
80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஆணையாளர் நடவடிக்கை.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தற்போது 5 வார்டுகள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கு எய்தப்பட்டுள்ளது. தற்போது, விடுபட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.
இதற்காக, மதுரை மாநகராட்சியில் இயங்கும் 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையத்தில் உள்ள அலைபேசி எண் 8428425000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு செய்து கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதிவு செய்து ஒரு வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்தவாய்ப்பை அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொண்டு கொரோனா நோய்ப்பரவலில் இருந்து காத்துக் கொள்ளுமாறு ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.