மதுரையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள்கள் பறிமுதல்
மதுரை புறநகர் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட, ரூ. 5 லட்சம் பெறுமான பொருட்கள் பறிமுதல்;
மதுரை மாவட்டத்தின் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பிரபல டீ தூள், மற்றும் பெருங்காயம், பல்பொடி. மூக்குப் பொடி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் மேலாளர் முகமது அப்துல் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுரை புது ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேலாளர் அதிரடி சோதனை செய்தபோது, பிரபல நிறுவனங்களின் பெயரில் மூட்டை மூட்டையாக டீ தூள் மற்றும் காப்பி பொடி, பல் பொடி, பெருங்காயம் மூக்குப்பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, உற்பத்தி செய்வதற்காக வைத்திருந்த 6 இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், போலியாக பொருட்கள் உற்பத்தி செய்த அதே பகுதியை சேர்ந்த உரிமையாளர் சௌந்தரபாண்டியன் என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து ,விசாரணை நடத்தி வருகிறார்கள்.