நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு
ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக 2 பங்கு நிதி வழங்கி மக்கள் பரிந்துரைக்கும் நலப்பணிகள் மேற்கொள்ளலாம்;
நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்று மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயலபடுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெற்றிகரமான திட்டமான நமக்கு நாமே திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு, இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுமைக்கும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் சமூக நலஅமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்.நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் படி, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், பொதுமக்களுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீர்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை அமைத்தல், மின் மயானங்கள் அமைத்தல், சாலைகள் சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.
இத் திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தேர்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் அல்லது நகரப் பொறியாளரிடம் வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு மாநகர பொறியாளரை நேரிலோ 97888 10185 என்ற தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.