மதுரையில் பெண்களிடம் நகைகளை பறித்த நான்கு பேர் கைது
மதுரை மாநகரில் 13 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன;
மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ்.எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறிவதற்காகவும் ,மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (குற்றம்) இராஜசேகர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
குற்றச்சம்பவங்களில், ஈடுபட்ட குற்றவாளிகளை சிசிடிவி,கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்த போது, குற்றவாளிகள் மணி (எ) வைரமணி, மதன்குமார், சிவா மற்றும் விஜய் ஆகியோர் என தெரியவந்ததது. இவர்கள், மதுரை மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களிலும், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு செயின் பறிப்பு சம்பவங்களிலும், இரண்டு வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களை கண்டறிய சிசிடிவி, கேமராக்களின் பதிவுகள் உறுதுணையாக இருந்தது.
மேலும் , பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.