மதுரை ஆவின் விற்பனை மாதம் ரூ. 3 கோடி: பொது மேலாளர்
ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை மாதம் சுமார் 3 கோடி அளவிற்கு உள்ளதாக மதுரை ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
மதுரை மாவட்டம், ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு தோராயமாக சுமார் 3 கோடி அளவிற்கு விற்பனை மதுரை ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் பொது மேலாளர் டி.ஆர்.டி.சாந்தி, தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் 16.05.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பால் விலையை குறைத்ததற்கு பின்பு தற்பொழுது சுமார் 1.94 இலட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒன்றியத்திற்கு சுமார் 13624 லிட்டர் விற்பனை உயர்ந்து சுமார் 2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த 2021-2022-ஆம் ஆண்டு தணிக்கையின்படி மதுரை ஒன்றியத்தின் இலாபம் தோராயமாக ரூபாய் 18.31 கோடி ஆகும்.
மதுரை மாவட்டத்தில் 720 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் 183532 லிட்டர் அளவில் நாளொன்றுக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதர ஒன்றியங்களில் இருந்து நாளொன்றிற்கு சராசரியாக 1.80 இலட்சம் பால் பெறப்பட்டு கையாளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சுமார் 17935 சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது, நாளொன்றிற்கு சுமார் 194392 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், பிற மாநிலங்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யப்படுகிறது. பால் உபபொருட்களான பால் பவுடர் பால் பேடா நறுமண பால் பனீர் மைசூர்பா வெண்ணெய் மற்றும் நெய்யாக உற்பத்தி செய்யப்பட்டு மாதம் ஒன்றிற்கு சுமார் ரூபாய் 2 கோடி வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை இணையம் மற்றும் பிற ஒன்றியங்களிலிருந்து பிஸ்கட் பாயாசம் மிக்ஸ் பாதாம் பவுடர் , மில்க் ஷேக், மாவின் ஐஸ்கிரீம், நூடுல்ஸ், பால் பவுடர் டெய்ரி வொயிட்னர் சாக்லேட், குளாப்ஜாமுன் மற்றும் மிக்ஸ் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை ஒன்றியத்திலுள்ள பாலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, உருமாற்றம் செய்யப்படும் பால் மற்றும் பால் உபபொருட்கள் 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு தோராயமாக சுமார் ரூபாய் 3 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மாநிலத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தினசரி 1.95 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உபபொருட்களான தயிர்,மோர், பால்கோவா, மைசூர்பாகு, பனீர், நறுமணப்பால் ஆகியவை தினந்தோறும் ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ,விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மதுரை ஆவினின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளின் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில் மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்