கடந்த ஆட்சி குளறுபடிகளை சரிசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்-அமைச்சர்
கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்
கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.
முதுகுளத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...
கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட கொள்முதல் முறைகேடு குறித்த கேள்விக்கு:
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை கொள்வான். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. திமுக ஆட்சியில் பெண்கள் விரும்பி பயணிக்கிறார்கள் அதனால் பெண்கள் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக எதிர்பார்க்கப்பட்டது தற்போது 60 சதவீதமாக உள்ளது. பழிவாங்கும் உணர்வு என்பது இதில் கிடையவே கிடையாது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட போக்குவரத்து திட்டங்களால் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு: கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்வதே தமிழக முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. இட ஒதுக்கீடு பெண்களுக்கான பிரச்சனை மற்றும் ஒன்றிய அரசோடு இருக்கக்கூடிய நடவடிக்கைகள் என அனைத்திலும் நிதானமாக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். எனவே இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்பார்க்கலாம்.
புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு:
புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக 2200 பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மனியிலிருந்து கடனுதவி வர உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் டீசல் பேருந்துகள் உட்பட 500 பேருந்துகள் வரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதன் மூலம் டீசல் செலவு மிச்ச படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
அதி சொகுசு பேருந்துகள் (மல்டி ஆக்சில் பஸ்) இயக்குவது குறித்த கேள்விக்கு: தமிழக அரசைப் பொறுத்தவரைமாற்றுத் திறனாளிகளுக்கு என வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். எனவே சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த வாகனங்கள் அமைத்து தரப்படும்.
கடந்த ஆட்சியில் தற்காலிக ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:
இந்த அரசு தொழிலாளர்களுக்கான அரசு. கொரோனா முடிந்த பிறகு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனவே தொழிலாளர்கள் பிரச்சினையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம் என்றார்.