மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்! பரபரப்பு!
சேதுபதி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் உள்ள ஒரு மையத்தில் காவி முண்டாசு கட்டி பணியாற்றிய தேர்தல் அலுவலர் கட்சி முகவர்களின் எதிர்ப்பு காரணமாக அனுப்பப்பட்டார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் உள்ள ஒரு மையத்தில், காவி முண்டாசு கட்டி பணியாற்றிய தேர்தல் அலுவலரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி முகவர்களின் எதிர்ப்பு காரணமாக, அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டார். மதுரை மாநகருக்கு உட்பட்ட சேதுபதி மேல்நிலைப்பள்ளி வார்டு எண் 55 மற்றும் வாக்குச்சாவடி 55-இல் பணியாற்றிய குணசீலன் என்ற தேர்தல் அலுவலர் தலையில் காவி முண்டாசும் மஞ்சள் சட்டையும் அணிந்து தேர்தல் பணி செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்தத் தோற்றம் குறித்து திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி முதன்மை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து, அக்குறிப்பிட்ட தேர்தல் அலுவலர் அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இவர், உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கோயிலின் பூசாரி பரம்பரையைச் சேர்ந்தவர். ஆகவே, இயல்பாகவே தனது அலுவலகத்திலும் இதே தோற்றத்தோடு தான் இவர் பணி செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், தேர்தல் பணியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு இருந்த அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.