கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலை!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் புகழ்பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் நிகழ்வில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகளை அணிந்து கொண்டு தான் இறங்குவார். இவ்வழக்கமானது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த ஆண்டு மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு, கிளி ,மலர்மாலை ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு செல்லும் வைபவம் நடைபெற்றது.
இன்று இரவு தல்லாகுளத்தில் நடைபெறும் எதிர் சேவையின் போது, தங்கக் குதிரையில் எழுந்தருளும் கள்ளழகருக்கு, ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கலைந்த மலர்மாலை அணிவிக்கப்படும். அதன்பின் நாளை (ஏப்.23) சித்ரா பௌர்ணமியன்று தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார்.
மங்கல பொருள்களை ராஜா பட்டர் கொண்டு சென்றார் . ஆண்டாளுக்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா கோயில் செயல் அலுவலர் (கூ. பொ) லட்சுமணன் அறங்காவலர் குழு உறுப்பினர் நளாயினி கோவில் ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ் கிச்சப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் செயல் அலுவலர் (கூ. பொ) லட்சுமணன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.