ஆண் வாக்காளரை, பெண்ணாக மாற்றிய தேர்தல் ஆணையம் மதுரையில் சர்ச்சை
மதுரை மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் ஆண் வாக்காளருக்கு, பெண்ணின் புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் குளறுபடியால் சர்ச்சை எழுந்துள்ளது.;
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட தலைவிரிச்சான் சந்தில் வசித்து வருவர் சின்னதம்பி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாமில் வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பதிவு செய்திருந்தார்.இந்த நிலையில் அவருக்கு நேற்று தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அவரது இல்லத்திற்கு வந்தது.
தபாலை பிரித்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார், அதாவது அவரது வாக்காளர் அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் எனது புகைப்படத்திற்கு பதிலாக பெண்ணின் புகைப்படம் இடபெற்றுள்ளதால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தவறுகளால் 100 சதவீத வாக்குப்பதிவு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியையும் சின்னதம்பி எழுப்பினார்.