மதுரையில் தேர்தல் நடத்தை விதியை தொடர்ந்து மகாத்மா காந்தியின் சிலை மூடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைக்கபட்ட துணி அகற்றப்பட்டது.
தமிழக சட்டமன்றத் பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் சிலைகள் துணி கொண்டு மூடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மதுரை யானைக்கல் சந்திப்பில் உள்ள தேசபிதா என்றழைக்கப்படும் மார்பளவு கொண்ட காந்தியின் சிலையும் வெள்ளைத் துணி கொண்டு மூடப்பட்டிருந்தது காந்தி ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் மகாத்மா காந்தி சிலையில் சுற்றப்பட்டிருந்த துணி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.