மதுரையில் தேர்தல் காரணமாக மகாத்மா காந்தி சிலையை மூடியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் துணியால் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை யானைக்கல் சந்திப்பில் உள்ள மார்பளவு காந்தியின் சிலையும் வெள்ளைத் துணி கொண்டு மூடப்பட்டிருந்தது காந்தி ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காந்திய அமைதி சங்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் கூறுகையில், மகாத்மா காந்தி இந்த தேசத்தின் அடையாளம். எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்திற்கோ, கட்சிகளுக்கோ அமைப்புக்கோ சொந்தம் அல்ல. அப்படி இருக்கும்போது அவரது சிலையை துணி கொண்டு மூட வேண்டிய அவசியம் என்ன வந்தது? தேர்தல் காலத்திற்காக அவரது சிலை மூடப்பட்டது என்றால் அதற்கு உரிய விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் இருக்கின்ற காந்தியின் படத்தை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குனர் நந்தா ராவ் கூறுகையில், இது மிகுந்த வருத்தத்திற்குரிய செயல். இப்போது தேர்தல் காலம் என்பதால் மதுரையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணி கொண்டு மூடப்பட்டுள்ளன. காந்தி எந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்தார்? இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் காந்தி சிலையின் மீது இருக்கும் துணியை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.