மதுரையில் சாலையில் சிதறிய ஜல்லிகற்களை அகற்றிய காவல்துறையினருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று இரவு லாரியில் சென்று கொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டியுள்ளது. இதில் அதிக அளவாக டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்க பாதை அருகே 10 அடி தூரத்திற்கு ஜல்லி கற்கள் சிதறிக் கிடந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிறு காயங்களுடன் தானாக எழுந்து சென்றார்கள்.
இது குறித்து, தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் மற்றும் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய், உதவி ஆய்வாளர் சேகர், காவலர் திருப்பதி ஆகியோர் இணைந்து சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இரவு நேரத்தில் ஜல்லிகற்களை ஏற்றிச் சென்ற லாரி பின்பக்க கதவை சரியாக மூடாமல் இருந்ததால் சாலை முழுவதும் ஜல்லிக் கற்களை சிதற விட்டு சென்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.துரிதமாக செயல்பட்டு ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.