கடைசிவரை வருங்கால முதல்வர் தான் முதலமைச்சர் ஆகவே முடியாது - மு.க.அழகிரி
ஸ்டாலின் கடைசிவரை முதல்வர் ஆக முடியாது, திமுக கருணாநிதியை மறந்த திமுகவாக மாறிவிட்டது, கருணாநிதியின் உடல்நலம் குன்றியதற்கு மு.க.ஸ்டாலினே காரணம் மு.க.அழகிரி குற்றச்சாட்டு.;
மதுரையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடத்தினார். அந்த ஆலோசனை கூடத்தில் அவர் பேசியதாவது :
என்னை திமுகவில் இருந்து சில துரோக சக்திகள் கலைஞரிடமும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள், ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என என் வீடு தேடிவந்து பரிசீலனை செய்ய சொன்னார்கள், அதனால் அவர் பொருளாளர் ஆனார். எனக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்ததால் பொறாமையில் பொருளாளர் பதவி கேட்டார். கருணாநிதிக்கு பின் நீ தான் எல்லாம் என ஸ்டாலினிடம் நான் கூறினேன், ஆனால் தற்போது துரோகம் செய்துவிட்டார். நான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதல்வர் வேண்டும் என கேட்டதாக கருணாநிதி கூறினார், உடனடியாக ஒப்புக்கொண்டேன். கழகத்திற்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன், திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரை காட்டி கருணாநிதியை ஏமாற்றியதை சுட்டிக்காட்டினேன். எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் அடித்த நோட்டிசை காரணம் காட்டி என் மீது நடவடிக்கை எடுக்கவைத்தார்கள். ஸ்டாலினுக்கு திமுகவினர் வருங்கால முதல்வரே என நிரந்தரமாக போஸ்டர் அடித்து வைத்துள்ளார்கள் ஆனால் அதுதான் உண்மை ஸ்டாலின் கடைசிவரை வருங்கால முதல்வர் தான் முதலமைச்சர் ஆகவே முடியாது, கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் 7ஆண்டுகளாக பொறுமையாக இருந்துவிட்டோம். நான் எந்த முடிவு அறிவித்தாலும் அதனை எனது ஆதரவாளர்கள் ஏற்றுகொள்வார்கள்.
2016 தேர்தலில் கருணாநிதியை கட்டாயபடுத்தி திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவைத்து, வேண்டுமென்றே அவரை மேடையில் ஏற்றி பிரச்சாரம் செய்யவைத்து அவரின் உடல்நலனை கெடுக்க வைத்துவிட்டார்கள். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். எதையும் சந்திக்க தயாராக இருங்கள், ஸ்டாலினை கலைஞரை மிஞ்சி விட்டீர்கள் என கூறுவதை யார் ஏற்பார்கள், கலைஞரையே மறந்து திமுக தற்போது செயல்படுகிறது. கருணாநிதியின் பெயரை நினைவுகூறும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும். எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம், எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று மு.க.அழகிரி பேசினார்.