லாரிகளுக்கான வரி, கட்டணம் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை

லாரிகள், கனரக வாகனங்களுக்கான வரி, மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு வரும் டிச.31 வரை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-11-03 11:30 GMT

கோப்பு படம்

இது குறித்து மோட்டார் தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் தலைவர் செல்ல ராஜாமணி, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  பரவலைத் தடுக்க,  ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இன்னும் பல தொழிற்சாலைகள் முழுமையாக உற்பத்தியை துவங்காமல் உள்ளதால் நாடு முழுவதும்,  60சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு,  40சதவீத லாரிகள் லோடுகள் கிடைக்காமல் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே,  டீசல் விலையேற்றம், சுங்கக்கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு ஆகியவற்றால் லாரிகளை லாபகரமாக இயக்க முடியவில்லை. இதனால் லாரிகளுக்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மாதக்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல், மிரட்டலுக்கு பயந்து ஆங்காங்கே லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள்.

கனரக வாகன உரிமையாளர்களின் சிரமத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், மத்திய அரசு கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ், பர்மிட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை சான்றுகளையும் 1.7.2021 முதல் 30.9.2021 வரை நீட்டிப்பு செய்தது. காலாண்டுவரி காலாவதியாகும் தேதியை 30.10.2021வரை காலநீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்னும் லாரிஉரிமையாளர்கள் முழுமையாக வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாலும், தற்சமயம் தீபாவளி பண்டிகை என்பதாலும்,  வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு,  ஏற்கனவே காலநீட்டிப்பு செய்த 30.10.2021 என்பதில் இருந்து, வருகிற 31.12.2021 வரை,  அபராதமின்றி செலுத்த காலநீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News