கார்ப்பரேட்டுகளை தூக்கி அடித்த உள்ளூர் 'ஸ்நாக்ஸ்' வகைகள் (Exclusive)
தமிழகத்தில் சமீபகாலமாக உள்ளூர் ஸ்நாக்ஸ் வகைகள் கார்ப்பரேட்டுகளின் தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளி வியாபாரத்தில் வேகமாக முன்னேறி வருகின்றன.
தமிழகத்தில் துாத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்துார் சேவு, திருநெல்வேலி அல்வா, மதுரை மிட்டாய், தேனி காரவடை, பால்பன், கை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, திருச்சி மணப்பாறை முறுக்கு என ஒவ்வொரு ஊரிலும் ஸ்நாக்ஸ் வகைகள் பிரசித்தி பெற்று இருந்தன.
சமீபகாலமாக ஒரே ஊரில் பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகள் இதே தரத்துடன் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் உள்ளூர் பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை இடம் பிடித்து விற்பனையில் கொடி கட்டி உள்ளன.
குறிப்பாக துாத்துக்குடி மாவட்டத்தில் மக்ரூன் மட்டுமின்றி சேவு, மிக்சர், முறுக்கு வகைகளின் வியாபாரம் களை கட்டி வருகிறது. சிவகிரி சேத்துாரில் உள்ள ஒரு சிறிய கடையில் தயாராகும் முறுக்கை வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். மிகப்பெரிய அந்த முறுக்கு அளவில் மட்டுமின்றி சுவையிலும் அசத்தி விடுகிறது. இதேபோல் அங்கு தயாராகும் இனிப்பு, கார வகைகள் வட மாநிலங்கள் வரை செல்கின்றன. பால்கோவா, பால் அல்வா தயாரிக்காத இனிப்பகங்கள் இல்லவே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
குறிப்பாக தற்போதய தொழில்நுட்ப அதிகரிப்பு காரணமாக உணவு தொழில்நுட்பங்களும் மிக எளிதில் விரிவடைந்து விட்டன. விருதுநகர் புரோட்டோவை போட்டிக்கு வருகிறாயா? என்கிறது தேனி புரோட்டா. ஆமாம் தேனியில் எவரெஸ்ட் கடையில் புரோட்டா மிக, மிக பிரபலம். (இங்கிருந்து பிரியாணி பல நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. இது பற்றி தனியாக பார்க்கலாம்)
விருதுநகர் பர்மா கடை புரோட்டா சாப்பிட்டவர்கள், தேனி எவரெஸ்ட் புரோட்டாவை சாப்பிட்டால் பாராட்டாமல் இருக்க முடியாது. தேனி புரோட்டாவிற்கு சென்னை வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். பல பெரும் தொழிலதிபர்களும், மிகப்பெரும் முதலாளிகளும் இதில் அடக்கம்.
அதேபோல் கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய், கை முறுக்கு, சீவல், அவல்பொறி ஸ்நாக்ஸ் (தேனியில் மிகவும் பிரபலம்) அரிசி பொறி ஸ்நாக்ஸ், பால்பன் (தொண்டையில் வழுக்கிக் கொண்டு சென்று வயிற்றுக்குள் சென்ற பின்பும் இனிப்பு சுவை காட்டும்) உட்பட அத்தனை வகை இனிப்பு, கார வகைகளும் தேனியில் தயாராகி சூப்பர் மார்க்கெட்டுகளை ஆக்கிரமித்து விட்டன. இதே நிலை தான் அத்தனை மாவட்டத்திலும் உள்ளது என சிறு தொழில் தயாரிப்பாளர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
குறிப்பாக முன்பு பேக்கரி, ஓட்டல் தொழிலில் கவனம் செலுத்திய பலரும் இன்று ஸ்நாக்ஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தி உள்ளூர் மார்க்கெட்டை கைப்பற்றி விட்டனர் என்றே கூறலாம். இதில் பதப்படுத்தப்பட்ட வகைகள் என எதுவும் சேர்ப்பதில்லை. அஜினமோட்டா உள்ளிட்ட சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதில்லை. எண்ணெய் இல்லாமல் சேவு தயாரிக்கும் தொழில்நுட்பம் தான் இன்று உணவு தொழில்நுட்பத்தின் உச்சம். அப்படி தேனி நாகலாபுரத்தில் தயாராகும் சோவு இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலக நாடுகளையும் ஈர்த்து வருகிறது.
குறிப்பாக மக்கள் மத்தியில் பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்பினை விட உள்ளூர் சிறு தொழில் தயாரிப்புகள் தரம் மிகுந்தவை. உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்ற எண்ணம் உருவாகி விட்டது. நிலக்கடலை புட்டு, பொறிகடலை புட்டு, பச்சைபயறு புட்டு, கம்பு புட்டு என (உருண்டை வடிவில் குஷ்பு இட்லிபோல் மென்மையாக தித்திக்கும் சுவையுடன் இருக்கும்) இனிப்பகங்களுக்கு செல்பவர்கள், இதனை வாங்காமல் கடந்து செல்லவே முடியாது. அதேபோல் புட்டு மாவு, கேப்பை மாவு, கம்பு மாவு, கடலை மாவு, ரவை, சேமியா, சவ்வரிசி கூட உள்ளூர் மகளிர் குழுக்கள், சிறு தொழில் அதிபர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் என்றால் மட்டுமே வாங்குவோம் என்ற மனநிலையில் ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரம் பேர் வந்து விட்டனர்.
இப்படி வலுவான வாடிக்கையாளர் வட்டம் சேர்ந்து விட்டதால் உள்ளூர் ஸ்நாக்ஸ் சிறு தொழில்களின் விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது. பெட்டிக்கடையாக இருந்தால் என்ன... சூப்பர் மார்க்கெட்டாக இருந்தால் என்ன... எது விற்கிறதோ அதனை வாங்கி விற்பது தானே வியாபாரம். எனவே வியாபாரிகளும் உள்ளூர் ஸ்நாக்ஸ் தயாரிப்பாளர்களை தேடித் தேடி அவர்களின் தயாரிப்புகளை வாங்கி வைக்கின்றனர். இதனால் ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தயாராகும் ஸ்நாக்ஸ் இன்று மிகப்பெரிய மாநகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் கூட கிடைக்கின்றன. கொரோனாவில் விழுந்த தொழில்கள் மக்கள் கொடுத்த வரவேற்பால் கொடி கட்டிப்பறக்கின்றன.