கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி ஒன்னு குறுக்கை கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன் இரவு 20 யானைகள் முகாமிட்டுள்ளன ஏரிகரையோரம் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இப்பகுதியில் நெல், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்கள் பல ஏக்கர்களில் விவசாய நிலங்கள் உள்ளன. அய்யூர் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு உணவு, தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது வழக்கமாக நடந்து வருகிறது.
அதிலும் தற்போது கடந்த ஒரு ஆண்டுக்குமேலாக சரிவர மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. இவற்றை தேடி தோட்டப்பகுதிக்கு வருகின்றன.
ஏரிகளில் தண்ணீர இல்லாததால் அருகில் உள்ள வயல்கள், தோப்புகளுக்கு படையெடுக்கின்றன. அங்கு பம்புசெட் தொட்டிகளில் இருக்கும் நீரை குடித்துவிட்டு பயிர்களை நாசம் செய்து செய்கின்றன.
இதில் சிவக்குமார் என்பவரின் இரண்டு ஏக்கர் நெற்பயிர், கோவிந்தப்பாவின் ஒரு ஏக்கர் நெற்பயிர், பாப்பண்ணா என்பவரின் ஒரு ஏக்கர் முட்டைகோஸ் ஆகியவற்றை காலில் மிதித்தும் தின்றும் நாசம் செய்து சென்றுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே வறட்சியால் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி உள்ள நிலையில் வனவிலங்குகளாலும் தொடர்ந்து இழப்புகள் ஏற்படுவது வேதனையாக உள்ளது. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே மீண்டும் விவசாயத்தை தொடர முடியும் என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தனர்
வனத்துறை அதிகாரிகள் யானைகள் நாசம் செய்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.