கிருஷ்ணகிரியில் சிறுதானிய திருவிழா: ஆட்சியர் துவக்கம்
கிருஷ்ணகிரியில் சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று துவக்கி வைத்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 முன்னிட்டு, சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (27.11.2023) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களாகிய நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராகி, சோளம், கம்பு, திணை, வரகு, குதிரைவாலி மற்றும் சாமை முதலியவை ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய சிறுதானியங்களாகும்.
இன்றைய உலகில் உடல் நலம் பேணுவதில் குறிப்பாக சர்க்கரை நோயுற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சிறுதானியங்களில் உள்ள சத்துப் பொருட்களும், புரதமும், நார்பொருட்களும் மற்றும் பூர்த்தியடையாத கொழுப்பும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியதாகும். இதனை பல்வேறு வகையான வடிவங்களில் நம் உணவில் சேர்ததுக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் பல உயிர்சத்துகள் நிறைந்துள்ளன.
சிறுதானிய உணவுகள் இதயத்தை வலுவாக்குவதோடு நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
சிறுதானியங்களை கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உண்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டினை கருவிலேயே களைவதற்கு உதவுகின்றது. மேலும் நார்சத்து நிறைந்து சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன.
பல வகைகளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர்ந்து இதன் பயன்பாட்டினை அதிகரிப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல் சீரான ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவே நல்லது என்று உணர்ந்து அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து வந்தோம் என்றால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி 35000 எக்டர், சோளம் 3000 எக்டர், சாமை 400 எக்டர் மற்றும் கம்பு 300 எக்டர் என மொத்தம் 38700 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சிறுதானிய ஆண்டினை சிறப்பிக்கும் விதமாக வேளாண்மைத்துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறைகள், சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து பயிற்சிகள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் வாயிலாக சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அரசு மற்றும் தன்னார்வ நிறுவணங்கள் எடுத்துள்ள முன்னெடுப்புகளை தொடர்ந்து ஊட்டச்சத்துமிகு சிறுதானிய உணவு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் எதிர்கால சந்ததிகளிடையே ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மைத்துறை சார்பாக பாரம்பரிய நெல், ராகி, கம்பு, சோளம், வரகு, திணை, சாமை, கீரை வகைகள் மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) எஸ்.சுந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.