கிருஷ்ணகிரி மாவட்ட க்ரைம் செய்திகள்
Krishnagiri News, Krishnagiri News Today- ஊத்தங்கரை அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததால் நகை, பணம், நெல் மூட்டைகள் எரிந்து சேதமானது.;
மின்கசிவால் தீப்பற்றி எரிந்த குடிசை வீடு
Krishnagiri News, Krishnagiri News Today- ஊத்தங்கரை தாலூகா மிட்டப்பள்ளி அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் விவசாய நிலத்துக்கு சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதில், மின்கசிவு ஏற்பட்டு அவரது வீட்டில் தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.2 லட்சம், 15 நெல் மூட்டைகள், வீட்டு, நிலப்பத்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து பூபாலன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
ஆலப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. கடந்த 5-ம் தேதி இரவு இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், சதீஷ்குமார் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலூகா போலீசார், அங்கு வந்து உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
சென்னை நங்கநல்லூர் கே.கே.நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மகன் குல்தீப் (வயது 12). கோடை விடுமுறைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு வந்தார். கடந்த 5-ம் தேதி மாலை சிறுவன் வீட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் பட்டம் சிக்கி கொண்டது. அதை எடுக்க குல்தீப் முயன்றபோது, மின்கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி குல்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மீன் வியாபாரியை தாக்கிய இருவர் கைது
போச்சம்பள்ளி, குள்ளம்பட்டி அருகே கே.புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). மீன் கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி இவரது கடைக்கு பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி அருகே பூகுட்டை பகுதியை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் மீன் வாங்க வந்தார். அப்போது முனியப்பன்,, சதீஷ்குமார் கடை முன் எச்சில் துப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது முனியப்பன், அவரது நண்பர்கள் அருள் (21), சச்சிக் (26) ஆகியோர் சேர்ந்து சதீசை தாக்கினர். இதில் காயமடைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் முனியப்பன், அருள் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
பாகலூர் போலீசார், ஈச்சங்கூர் அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் பெலத்தூர் பாகலூர் சாலையை சேர்ந்த சீனிவாசன் (வயது 48), பாகலூர் மஞ்சு (32), பாகலூர் ரவி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,580 பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 18 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை நடப்பது குறித்து, போலீசார் கண்காணித்தனர். அப்போது சிங்காரப்பேட்டை, குருவிநாயனப்பள்ளி, ஓசூர், பாகலூர், தொட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை பிடித்து, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் குட்கா விற்பனை செய்த 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,600 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு விற்றதாக 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.300 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.