தேன்கனிக்கோட்டையில் கனமழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
Krishnagiri News, Krishnagiri News Today-தேன்கனிக்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Krishnagiri News, Krishnagiri News Today - தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், கோடை மழை பெய்து வருகிறது. அக்னி வெயிலில் தவித்து வரும் மக்கள், கோடை மழையால் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில் 75 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட தேர்பேட்டை சாலை 2-வது குறுக்கு தெரு முதல் 5-வது தெரு வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மேலும் விஷஜந்துகளும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில், இதுபோல் மழை பெய்யும் நாட்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, தாழ்வான பகுதிகளில் வழிந்தோடி வரும் மழைவெள்ளம், வேறுவழித்தடங்களில் மாற்றிவிட, ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தனியார் மோட்டார் பைக் ஷோரூமிற்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கனமழை பெய்ததால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததாக மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் தொட்டிக்குள் கழிவு நீருடன் மழைநீர் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு கவுன்சிலர் மாது பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் பேசி உரிய முறையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.