மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை குணமாக்கிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள்
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞருக்கு 93 நாள் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் குணமாக்கினர்
கிருஷ்ணகிரியில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், தான் யார் என்ற விவரம் கூட தெரியாத அளவில் இருந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் மன நல மருத்துவர்கள் பூங்கொடி, முனிவேல், சுவேதா மற்றும் செவிலியர் குமார் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து, 80 நாட்கள் சிகிச்சையளித்தும் சுயநினைவின்றி இருந்த வாலிபருக்கு, 81வது நாளில் சுயநினைவு மெதுவாக திரும்பியது. அவர் தன் பெயரை கூறாமல், ஒரிசா மாநிலம் கதிகானியா என்னும் அவரது ஊர் பெயரை மட்டும் திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் அனுப்பிய விவரங்களுடன் காவல்துறையினர், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒரிசா மாநிலம், கதிகானியாவை சேர்ந்த அஜய்,(வயது18) என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அஜய்யை அழைத்து செல்ல அவரது உறவினர் பிஜய்குமார் என்பவர் வந்த நிலையில் அஜய்யின் ஆவணங்களை சரிபார்த்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து 93 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த அஜய்யை, ஒரிசா மருத்துவமனையில் சிகிச்சையை தொடருமாறு கூறிய மருத்துவர்கள் நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர்.