கிருஷ்ணகிரியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). வீட்டில் இருந்து நேற்று இரவு வெளியே கிளம்பிய இளைஞர் பாலாஜி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ரவுண்டானா பகுதியில் டிஜிட்டல் பேனர் கட்டும் பணிகளுக்கு செல்வதாக கூறி சென்று உள்ளார்.
பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாலாஜி மூச்சுப் பேச்சின்றி மயங்கி இருப்பதாக அவரது நண்பர்கள் பாலாஜியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் பாலாஜியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் அமைச்சர் வருகையை ஒட்டி அங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ராட்சத டிஜிட்டல் பேனர் அமைக்கும்போது மேலே சென்ற மின்சாரம் கம்பி மீது டிஜிட்டல் பேனர் பட்டு அதன் மூலம் பாலாஜி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும் அதனை மறைத்து பாலாஜியை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்த சிலர் வீட்டின் அருகே போட்டு விட்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் விசாரித்து, பாலாஜியின் மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பாலாஜி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.