தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 952 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கல்
ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, 952 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
அமைச்சர் ஆர்.காந்தி பேசுகயைில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் முதல் தொழிற்கல்வி பயின்றோர் வரை 1,55,914 வேலைநாடுநர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதனில் 80,327 பதிவுதார்கள் மகளிர் ஆவர். இப்திவுதாரர்கள் உள்ளிட்ட இளைஞர்களின் நலனுக்காக இந்த அரசு செயல்படுத்திவரும் பல சீரிய திட்டங்களில் ஒன்று இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஆகும்.
போட்டித் தேர்வுகளின் வாயிலாகவே அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு சாத்தியமாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். பெருகி வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக தற்போது தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை www.tnprivatejobs.tn.gov.in இணையத்தின் முக்கிய நோக்கமானது தனியார் துறையில் வேலையளிப்போருக்கான மனிதவள தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தமிழ்நாட்டை சார்ந்த வேலைநாடுநர்களுக்கு அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப தனியார் துறையில் வேலை பெற வழிவகை செய்யும் இணைப்பு பாலமாக திகழ்வதே ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்விணையத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 155 தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்து அவர்களின் தேவைக்கு ஏற்ப வேலைநாடுநர்களை தேர்வு செய்கின்றனர். இவ்விணையத்தினை பயன்படுத்தி இதுவரை 1,176 வேலைநாடுநர்கள் இம்மாவட்டத்தில் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2021-2022 - ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இம்மாவட்டத்தில் 3,994 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரூ.25,000/- சம்பளத்தில் SPEED MOTORS, HOSUR நிறுவனத்தில் 15 நபர்கள் பணிநியமனம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். இம்முகாம்கள் வேலைநாடுநர்களும், வேலையளிப்பவர்களும் நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது. மேலும், இவ்வாறான முகாம்கள் வேலைநாடுநர்கள் அவர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை தயார் செய்துகொள்ளவும் உதவுகிறது. முகாம் நடைபெறும் நாளிலேயே பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படுவது இதன் தனி சிறப்பாகும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் துயர் நீக்க கொண்டு வரப்பட்ட "வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின்" மூலம் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மூன்றாண்டு காலத்திற்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நாளது தேதி வரை 14,725 பொதுப்பிரிவினரும், 1,162 மாற்றுத்திறனாளிப் பதிவுதாரர்களும் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்.
போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு வேலைவாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அமைந்துள்ள தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் நடைபெறும் இவ்வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளவர்களில் 2021 வரை 72 நபர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும், இன்று நடைபெறுகின்ற வேலைவாய்ப்பு முகாமிற்கு Titan Company, Delta Electrionics & Speed Motors Pvt Ltd., போன்ற முன்ன னி நிறுவனங்களுடன் 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வாயிலாக 10,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பணிநாடுநர்கள் ஆகியோர் இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து பயனடைய வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஸ்குமார், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி.அ.லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.ம.கௌரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருமதி.ஹெப்சிபா ஏஞ்சலா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.வி.இ.சுந்தரம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர்.மாலதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுகவனம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.செங்குட்டுவன், வட்டாட்சியர் திருமதி .தெய்வநாயகி, ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி. சத்தியவாணி செல்வம், பேரூராட்சி மன்ற தலைவர்கள் திரு.ப. அமானுல்லா, திரு.தம்பிதுரை, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி. உ.கலைமகள் பார்த்தீபன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.ரஜினிசெல்வம், திரு. வெங்கடேசன், மற்றும் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.