ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி இளம்பெண் உயிரிழப்பு, பொதுமக்கள் போராட்டம்
ஓசூர் அருகே வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற இளம் பெண் ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்த 18 யானைகள் அடங்கிய கூட்டம் கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது. இந்நிலையில் ஒற்றை யானை மட்டும் வனப் பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது,
இந்நிலையில், இன்று அதிகாலை அந்த ஒற்றை யானை அனுமந்தபுரம் பகுதியில் சுற்றி திரிந்தது அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மமதா (வயது 27) கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக சென்ற போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த ஒற்றை யானை துரத்தி வந்துள்ளது. வாகன ஒட்டியும் அந்த பெண்ணும் கீழே விழுந்தனர். யானை தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை விட்டு வாகன ஓட்டி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த கிராம மக்கள் பெண் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என உடலை வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒற்றை யானையும் சிறிது நேரம் அப்பகுதியிலேயே சுற்றி திரிந்தது. அதனை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.