ஓசூரில் அடுத்த 7 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
Traffic change in Hosur - தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம் மற்றும் நகரம் ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலை, ஆர்.சி.தேவாலயம் அருகில் இரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் மேல்பகுதியில் இரயிலும், கீழே வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெற உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து ஒசூர் இரயில்வே நிலையம் வரை ஏற்கனவே உள்ள இரயில் வழிப்பாதை இரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்த்து தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள பாலத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட்டு 05-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது. ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் தளி சாலையில் சென்று அந்திவாடி கூட்டுரோட்டில் இடது புறமாகச்சென்று மத்திகிரி கூட்டுரோட்டை அடைந்து அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்ல வேண்டும். அதேபோல் மத்திகிரி கூட்டுரோட்டிலிருந்து இடது புறமாக திரும்பி தளி சாலையில் உள்ள அந்திவாடி கூட்டுரோட்டில் வலது புறமாக திரும்பி ஒசூர் சென்றடைய வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் இரயில்வே நிலையம் அருகே உள்ள இரயில்வே கீழ் பாதை வழியாக செல்லலாம். அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தேன்கனிக்கோட்டையிலிருந்து ஒசூர் நோக்கி வரும் பேருந்துகள் மத்திகிரி கூட்டு ரோடு, ஐடிஐ, இரயில்வே நிலையம் வந்து திரும்பி மத்திகிரி கூட்டு ரோடு, அந்திவாடி, தளி ரிங்ரோடு, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இரயிலில் பயனித்து வரும் பயனாளிகளுக்கு ஏதுவாக, இரயில் நிலையம் பின்பக்கம் பாரதிதாசன் நகர் வழியாக இரயில்வே நிலையம் சென்று பிறகு திரும்பி பேருந்து நிலையம் வந்தடைய தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தும் முன்பு 02.08.2023 அன்று சோதனை முயற்சியாக காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை போக்குவரத்து மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 05.08.2023 முதல் இரயில்வே பாலம் விரிவாக்கம் பணிக்காக மூடப்பட உள்ளது என ஒசூர் சார் ஆட்சிர் சரண்யா தெரிவித்துள்ளார்.