ஓசூரில் பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் கவலை
தென்மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்புவது பாதித்துள்ள நிலையில், ஓசூர் பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை சரிய துவங்கியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக பூக்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தமிழக எல்லையான, ஓசூரில், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடியாகின்றன.
இங்கிருந்து, தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் தினமும், 500 டன்னுக்கும் மேல் பூக்கள் அனுப்பப்படுகின்றன.
மேலும், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இரு பூ மார்க்கெட்டுகளுக்கு தினமும், 300 டன் அளவிற்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
'மிக்ஜம்' புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய, 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனால், அங்கு அனுப்ப வேண்டிய பூக்களை அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தன. அதனால், ஓசூர் பூ மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து, படிப்படியாக விலை சரிய துவங்கியது.
இந்நிலையில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழையால், அங்கு, 200 டன் பூக்களை அனுப்ப முடியவில்லை. அதனால் அந்த பூக்களும், ஓசூர் மார்க்கெட்டுக்கு வருகிறது. அதனால் பூக்கள் விலை சரிந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ, 450 ரூபாய் என விற்ற அரளி 300 ரூபாய்க்கும்; 200க்கு விற்ற சாமந்தி, 120க்கும், 100க்கு விற்ற சம்பங்கி, 50க்கும், 60க்கு விற்ற செண்டுமல்லி, 40க்கும், 130க்கு விற்ற ரோஜா, 100 ரூபாய் எனவும் விற்பனையாகின. காக்கடா பூ, 300 ரூபாய்க்கும், மல்லி, 1,000, முல்லை, கனகாம்பரம், 600 ரூபாய் எனவும் விற்பனையாகின.