சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: மேற்பார்வையாளர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மேற்பார்வையாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.;
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்று வரும் பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையருமான பழனிசாமி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இன்று (25.11.2023) ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் தெரிவித்ததாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள 3,257 வாக்குச்சாவடிகளில் கடந்த 04.11.2023 சனிக்கிழமை மற்றும் 05.11.2023 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2023, சனிக்கிழமை) மற்றும் நாளை (26.11.2023, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இம்முகாம் நடைபெறுகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் சேலம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் சூரமங்கலம், ஸ்ரீஇராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளி, தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, மஜ்ராகொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இம்முகாமில் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், (அதாவது 31.12.2005 முன்னர் வரை பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-யை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் (அதாவது 30.06.2006 வரை பிறந்தவர்கள்) 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
மேற்படி சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நேரில் சென்று படிவம் பெற்று பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் 09.12.2023 வரை பெறப்பட்டு 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர், வருவாய் கோட்டாட்சியர்கள் சேலம், மேட்டூர், ஆத்துர் ஆகியோர் வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ளனர். கடந்த நாட்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் பெற்றப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்பரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.