கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 276 மனுக்கள் அளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் இன்று (11.09.2023) நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 276 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ரூ.17 ஆயிரம் மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ஈமச்சடங்கு நிதியுதவி தொகையும், தலா ரூ.14 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பலான திறன் பேசிகள் என மொத்தம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டு, புகார்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு, புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் உண உணவகத்தை பார்வையிட்டு, சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.