முல்லை பெரியாறு அணைக்கு வரவேண்டிய தண்ணீரை திசை திருப்பி அனுப்பும் கேரளா

முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை வனத்திற்குள் தடுப்பணைகள் கட்டி கேரளா திசை திருப்பி வருகிறது என ஐந்து மாவட்ட விவசாயிகள் புகார் .;

Update: 2021-12-04 06:45 GMT

ஐந்து மாவட்ட வி வசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா பல இடங்களில் அணைகள் கட்டி திசைதிருப்புவதால் தான் வண்டிப்பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என தமிழக விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீ்ர் திறக்கப்பட்டதற்கே வெள்ளம் போகிறது என அலறுகின்றனர். வண்டிப்பெரியாறு, சப்பாத்து. வல்லக்கடவு கிராமங்களில் ஆற்றின் கரைகளில் வீடுகளை கட்டி உள்ளன. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? அவை முழுக்க ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள்.

வண்டிப்பெரியாறில் கம்பி பாலத்திற்கு கீழே 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதாக கூறுகின்றனர். அந்த பாலம் விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றாலும் தாங்கும் திறன் கொண்டது.

முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை ஏற்கனவே பம்பா டேம், கட்சு டேம், ஹெவிடேம், சபரிகிரி டேம் என பல அணைகளை கட்டி வண்டிப்பெரியாரை நோக்கி திருப்பி விட்டுள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரும் பகுதியில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி தண்ணீரை திருப்பி விட்டதால் தான் தற்போது அங்கு வெள்ளம் செல்கிறது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அணை நீர் மட்டம் 136 அடியை எட்டியதில் இருந்தே வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுத்து வருகின்றனர். இடுக்கி மாவட்ட நிர்வாகமும், கேரள அரசும் சேர்ந்து வேண்டுமென்றே நாடகம் ஆடுகின்றன.

கேரள அரசே மக்களை துாண்டி விட்டு, போராட்டம் நடத்துகிறது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் தண்ணீருக்கு படும் கஷ்டங்களை நேரடியாக பார்க்க, கேரள மாநில முன்னணி பத்திரிக்கையாளர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் வர மறுக்கின்றனர்.

வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து பகுதியில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும். குடியேற்ற வீடுகளை அரசியலுக்காக கேரள அரசு ஜோடித்துள்ளது தான் உண்மை.

முல்லை பெரியாறு அணை தண்ணீர் கேரளாவின் எந்த பகுதிக்குள்ளும் செல்லவில்லை என்பது திட்டவட்டமான உண்மை. ஆற்றுக்குள் வீடு கட்டிக்கொண்டு தண்ணீர் வருகிறது என்றால், அகற்றப்பட வேண்டியது வீடுகளை தான். ஆற்றை அகற்ற முடியாது. அணையை திறப்பதை நிறுத்த முடியாது.

கேரள முதல்வர் எழுதிய கடிதம் பற்றி விசாரணை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டால், கேரளாவின் பல தந்திரங்கள், பல உள்நோக்கமுடைய செயல்கள் வெளிவந்து விடும். இது பற்றி நன்கு தெரிந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதி காக்கிறார். தமிழகத்தின் அமைதி புயலுக்கு முந்தைய அமைதியா, பிந்தைய அமைதியா என்பதை காலம் உணர்த்தும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News