காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது;

Update: 2023-08-06 13:52 GMT

காற்றாலை இறக்கைகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை அதிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக காவல் சோதனை சாவடி அருகே வந்தபோது, சோதனை சாவடி அருகே சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால்அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கையை நீளமான லாரியில் கொண்டு செல்லும் போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி செல்ல முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டு மிகவும் மெதுவாக சென்றது.

அதன் காரணமாக சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்த வாகனங்கள் காற்றாலை விசிறி ரெக்கை கொண்டு செல்லும் லாரிக்கு பின்னால் வரிசையாக அணிவகுத்து மெதுவாக சென்றன.இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கையை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பகலில் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. பகல் நேரங்களில் வரும்போது அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News