தந்தை திட்டியதால் மகன் தற்கொலை: மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை
குளித்தலை அருகே மகன் தற்கொலை செய்து கொண்டதால், தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சுண்டுகுழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 43). இவர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் செல்வராஜ் (23), கரூர் அய்யர்மலையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவிட்டு தகுந்த வேலை தேடிக்கொண்டு இருந்தார். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. இதனை அவரது தந்தையான கோவிந்தராஜ் அடிக்கடி குறையாக கூறி வந்துள்ளார். அதேபோல் அடிக்கடி செல்போன் பார்ப்பதையும் அவர் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த செல்வராஜ் செல்போனில் மூழ்கியிருந்தார். இதைப்பார்த்த அவரது தந்தை கோவிந்தராஜ் வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றி வருவதோடு, செல்போனை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது தாய் சுமதி, மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறித்துடித்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மகனை இழந்த துக்கம் தாளாமல் விடிய, விடிய அழுது புலம்பிய அவரது தாய் சுமதி நள்ளிரவில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சுமதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து இறந்த தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை கண்டித்ததால் மகனும், மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.