புகளூர் காகித ஆலை மேலாளர் வீட்டில் கொள்ளை
புகளூர் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் ரூ.78 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
கரூர் மாவட்டம் புகளூர் செய்தித்தாள் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வருபவர் அண்ணாமலை (வயது 55). இவர் காகித ஆலை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி அண்ணாமலை தனது மகளின் படிப்புக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காகித ஆலை காவலாளி காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள சி43 பகுதிக்கு ரோந்து சென்றுள்ளார்.
அப்போது அண்ணாமலை வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. இதுகுறித்து காவலாளி துணை மேலாளரிடம் தெரிவித்துள்ளார். துணை மேலாளர் இதுகுறித்து உடனடியாக சென்னையில் இருந்த அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் சென்னைக்கு சென்றிருந்த அண்ணாமலை உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த காசு மாலை, ஆரம், நெக்லஸ், வளையல், தோடு, செயின் உள்ளிட்ட 115 பவுன் தங்கச் செயின்கள், வெள்ளி கொலுசுகள் 600 கிராம், ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
திருட்டுப் போன மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.78 லட்சம் ஆகும். அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம் செல்லும் சாலை, குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காகித ஆலை நிறுவனம் சார்பில் பாதுகாப்பு பணியில் காவலாளி போடப்பட்டிருந்தும் குடியிருப்பு வளாகத்துக்குள்ளையே பெரிய அளவில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.