புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் ரத்து

கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெறாததால் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Update: 2023-02-05 06:57 GMT

புகழிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது.

சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களின் விசேஷங்களும், தேரோட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. அதன்படி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை.

தற்போது அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவை நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முடியவில்லை.

இதனால் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளநீர் மற்றும் மயில் காவடிகளை எடுத்து செல்ல பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெறாததால் கோவில் அடிவாரம் வெறிச்சோடியது.

Tags:    

Similar News