செந்தில் பாலாஜி கைது: கரூரில் பரபரப்பு. பாஜக கொடி அகற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.;
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் இருந்து அவரது குடும்பத்தினர் சென்னை சென்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தின் கொடியை திமுகவினர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் குளித்தலை நகர் பாஜகவினர் பேருந்து நிலையத்திற்க்கு கொடியினை கிழித்த திமுகவினரை கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கரூர் எஸ்பி சுந்தரவதனம் கூறியதாவது:-
கரூர் மாவட்டம் குளித்தலையில் இன்று காலை பாஜக கொடிக் கம்பம் சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கரூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாவட்டம் முழுவதும் போதுமான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கூறினார்
இந்நிலையில் கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய சட்ட ஒழுங்கு கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தது வரவேற்று பட்டாசு வெடிக்க வந்தனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பட்டாசு வெடிக்க வந்த நபர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.