சமூக சீர்கேட்டிற்கு மருந்து வணிகர்கள் துணை போக வேண்டாம் என அறிவுறுத்தல்
மருத்துவர் கையொப்பமிட்ட சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும், சமூக சீர்கேட்டிற்கு துணை போக வேண்டாம் என மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக உதவி இயக்குநர் கூறினார்;
கரூரில் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதைக்கு தவறாக பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகளை மருந்து வணிகர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் சௌகத் அலி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவி, புரவலர் வள்ளியப்பன், மொத்த மருந்து வணிகர் சங்கத்தலைவர் சேகர், துணைத்தலைவர் இளங்கார்த்திகேயன், துணைச் செயலாளர் பாலு, நிர்வாகி சாய்தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டல உதவி இயக்குநர் அதியமான் பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் கூறியதாவது: மருந்து வணிகர்கள் மருத்துவர் கையொப்பமிட்ட சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும். மருத்துவரின் அனுமதிச் சீட்டுடன் வரும்போது மருந்து பொருட்கள் கொடுத்துவிட்டு அந்த சீட்டில் மருந்து வழங்கப்பட்டுவிட்டது என சீல் வைக்க வேண்டும்.
சிலர் போலியான மருத்துவ சீட்டை கொண்டு வந்து மருந்து வாங்க வந்தால் உடனே மருந்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான இந்த வணிகத்தை தவறாக பயன்படுத்திடக்கூடாது.
சமூக சீர்கேட்டிற்கு துணை போய்விடக்கூடாது. தவறான செயலில் ஈடுபட்டால் மருந்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே மருந்து வணிகர்கள் மருந்து விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்