மூடப்பட்டுள்ள வேலாயுதம்பாளையம் சிறுவர் பூங்காவை திறக்க கோரிக்கை

பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வேலாயுதம்பாளையம் சிறுவர் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-01-22 05:04 GMT

வேலாயுதம்பாளையம் சிறுவர் பூங்கா

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புஞ்சை புகழூர் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் விளையாட்டு திடலுடன், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்கள், சிறுமியர்கள் விளையாடுவதற்கு பல்வேறு உபகரணங்கள் இருந்தது. பெரியவர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு உபகரணங்கள், நடைபயிற்சி செய்வதற்கு ஏற்ற தரைத்தளம் அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது நீண்ட நாட்களாக பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பூங்கா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவால் மலைநகரான எங்கள் ஊருக்கு பெருமையாக இருந்தது. ஏனென்றால் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக கூடுவது இந்த இடத்தில் தான்.

இந்த பூங்கா இருந்தபோது, இங்கு ஏராளமான நண்பர்கள் வருவார்கள். நாங்கள் அனைவரும் தினமும் இங்கு சந்தித்து எங்களது அன்றாட விஷயங்களை இங்கு வந்து கூடி பேசுவோம். இங்கு வந்தால் அன்றைய தினமும் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷ நிலைக்கு சென்று விடுவோம். தற்போது இந்த பூங்கா இல்லாமல் நடைபயிற்சி செல்வதற்கே சிரமமாக உள்ளது.

இந்த பூங்காவிற்கு நாங்கள் வரும்போது குழந்தைகள் விளையாடுவதை பார்த்து நாங்களும் குழந்தையாக மாறி விடுவோம். மலைநகரில் நல்ல இயற்கை அழகுடன் பூங்கா இருந்தது. இங்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது பொழுதை கழித்து செல்வார்கள்.

மேலும், நடைபயிற்சி மேற்கொள்ள அனைவருக்கும் உதவியாக இருந்தது. சிறுவர், சிறுமியர் விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். எனவே பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் இந்த பூங்காவை விரைவில் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்

Tags:    

Similar News