கரூர் மாவட்டத்தில் 35 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
Karur News,Karur News Today- கரூர் மாவட்டத்தில், தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Karur News,Karur News Today- அரசு விடுமுறை நாட்களில், கட்டாயம் தொழில் துறை மற்றும் அரசு நிறுவனங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது, கட்டாயமாகும். தொழிலாளர் துறை சட்டப்படி, அன்று தொழிலாளர்களை கட்டாயம் பணியில் அமர்த்தக் கூடாது. அவ்வாறு, அன்று தொழிலாளர்கள் கட்டாயம் பணிசெய்ய வேண்டிய நிர்பந்தம், நிர்வாகத்துக்கு இருக்கும் பட்சத்தில், அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிலாளர் துறையிடம் அனுமதி பெற்று, செயல்படலாம். அன்று பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக இரட்டை சம்பளம் அல்லது மாற்றுவிடுமுறை உள்ளிட்ட தொழிலாளர் துறையின் நிபந்தனைகளுக்கு நிர்வாகம் கட்டுப்பட வேண்டும். இதை பின்பற்றாமல் விதிமீறல் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன், இரண்டாம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன் மற்றும் மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர்களுடன் கரூர் பகுதிகளில் மே தினமான கடந்த 1-ம் தேதி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினமான மே 1 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து 60 நிறுவனங்களில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 15 , உணவு நிறுவனங்களில் 18 , மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 2 என மொத்தம் 35 விடுமுறை தராமல் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு கண்டறியப்பட்ட நிறுவனங்களின் மீது. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின்படி கரூர் மாவட்டத்தில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். தொடர் ஆய்வின் சமயம் முரண்பாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில் கேட்பு மனு தாக்கல் அல்லது அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.