கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
Karur News,Karur News Today- குளித்தலை அருகே பைக் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.;
பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
Karur News,Karur News Today- குளித்தலை அடுத்த வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). இவர் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் மேல பஞ்சப்பட்டி கீரனுார் ரோட்டில் தனியார் கார்மென்ட்ஸ் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பெரிய சேங்கல் தெற்கு தெருவை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் பைக் முனியப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுபானம் விற்ற இருவர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்கானிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நொய்யல் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது48) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல் மூலிமங்கலம் பிரிவு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி(34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு
கரூர் பொரிக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது49). கூலித் தொழிலாளி. இவர் இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள கண்ணன் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டுக்குள் சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாடகை வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்ட்ரிங் தொழிலாளி உயிரிழப்பு
மணப்பாறை தாலூகா முத்தகபுடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிங்காரம் (வயது 61). இதுவரை திருமணமாகாத இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அன்று சின்னபனையூரில் வீரம்மாள் என்பவரின் தொகுப்பு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மிஷினில் அறுக்கும் போது எதிர்பாராத விதமாக இடது கட்டை விரல் மற்றும் இடது கால் சுண்டு விரலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிங்காரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குளித்தலை போலீஸ் ஸ்டேஷனி அவரின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கம்; கணவன் தற்கொலை
குளித்தலை அருகே இனுங்கூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தர்மலிங்கம் (வயது 65). இவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனதால், மனநலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த தர்மலிங்கம் கடந்த 28ம் தேதி அன்று யாரும் இல்லாத நேரத்தில் குருணை மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகன் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.