கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

karur news,karur news today- குளித்தலையில், நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண், விஷம் குடித்து உயிரிழந்தார்.

Update: 2023-02-26 10:28 GMT

karur news,karur news today- கரூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவ செய்திகளின் தொகுப்பு ( மாதிரி படம்)

karur news,karur news today-  விஷம் குடித்து பெண் தற்கொலை

குளித்தலை, பெரியபாலம் மலையப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக, பழனியம்மாள் வயிற்று வலி மருந்து மற்றும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினமும் பழனியம்மாளுக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனியம்மாள், விஷம் குடித்த நிலையில்,  குளித்தலை ரயில்வே கேட் அருகே மயங்கி கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள், மயங்கி கிடந்த பழனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த டிரைவர் கைது

கரூர், தாந்தோணிமலையை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 31). இவர் கரூரில் இரு சக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் இருந்து பஸ் மூலம் கரூர் வந்த அரவிந்த், திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே இறங்கினார். அப்போது, கரூர், சிவானந்தம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (26) என்பவர் தனது ஆட்டோவில், அரவிந்தை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்றார். பின்னர் ஆட்டோவை நிறுத்தி அரவிந்தை, மணிகண்டன் தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்தார். இதுகுறித்து அரவிந்த் கொடுத்த புகாரை அடுத்து, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது 

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலூகா, புலிவலம் அருகே உள்ள கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் துரைசாமி என்கிற பிரசாந்த் (வயது28).  இவர், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி, கரூர் மாவட்டம், நெய்தலூர் காலனி சின்ன கவுண்டம்பட்டி பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தகாத வார்த்தையால் திட்டினார். பின்னர் அவரை அரிவாளால் வெட்டியும், அங்கிருந்த மோட்டார் பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரைசாமியை கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது; துரைசாமி பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுக்கும் வகையில், பாதகமான செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து துரைசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குளித்தலை போலீசார் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி, துரைசாமி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வாகனம் மோதி முதியவர் பலி

கரூர், அரவக்குறிச்சி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). இவர் நேற்று மாலை புங்கம்பாடி பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி, அந்த இடத்திலேயே  இறந்தார். இதையடுத்து அவரை அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுக்கடையில் தகராறு; இருவர் கைது 

கரூர், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் ‘டாஸ்மாக்’ உள்ளது. இந்த கடையில், கோவகுளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 43) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்தநிலையில், பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது, அங்கு கத்தி மற்றும் பீர்பாட்டிலுடன் வந்த மகாதானபுரம் பகுதி சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (39) டிரைவர், பழையஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தையல்காரர் மனோகரன் (32) ஆகிய 2 பேரும் பாலகிருஷ்ணனை மிரட்டி, ‘இலவசமாக மது தரவேண்டும் இல்லையெனில் குத்தி விடுவோம்,’ என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ், மனோகரன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சென்னை, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 26). பி.பி.ஏ. படித்து விட்டு நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், சைதாப்பேட்டையில் இருந்து கோவைக்கு தனது பைக்கில் சொந்த வேலை நிமித்தாக சென்று கொண்டிருந்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியில் பைக்கில் அவர் வந்து கொண்டிருந்தபோது, உடல் சோர்வால் ஆனந்தகுமார் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து, படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை,  108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்  இறந்தார். இதையடுத்து ஆனந்தகுமார் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

பெண் மாயம்

குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மனைவி குணசீலா (வயது 40). கடந்த 20- ம் தேதி வீட்டில் வைத்து கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது குணசீலா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கேசவராஜ் தனது மனைவி குணசீலாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குணசீலா மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை 

லாலாபேட்டையில் இருந்து குளித்தலை நோக்கி சரக்கு ரயில் ஒன்று, நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் அய்யர்மலை ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, 80 வயது அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்தார். இதில் ரயிலில் அடிப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து, கரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் குறித்து, விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News