சூரியகாந்தியை, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய, கரூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை
karur news,karur news today- கரூரில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சூரியகாந்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
karur news,karur news today- கரூர் மாவட்டத்தில் 1,511 எக்டேரில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. அதற்கு உரிய விலை கிடைக்காததால் அரசே நேரடியாக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கடந்த காலங்களில் பருவ மழை பொய்த்து போன போதிலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காலக்கட்டங்களிலும், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சூரியகாந்தி சாகுபடியை விவசாயிகள் செய்கின்றனர். சூரியகாந்தி சாகுபடி 90 நாட்கள் முதல் 100 நாட்களில் பலன் தருகிறது. குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதாலும், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவது வழக்கமாக உள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெள்ளியணை, தரகம்பட்டி, கானியாளன்பட்டி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 1,511 எக்டேரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்பட்ட சாகுபடி தற்போது செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து காட்சியளிக்கிறது. மேலும் ஏராளமான விதைகளுடன் முளைத்து உள்ளன.
இவற்றைப் பொறுத்தவரை பராமரிப்பு செலவு மற்றும் ஆட்கள் கூலி ஆகியவை சற்று குறைவு என்பதால் பலர் சூரியகாந்தியை பயிரிட்டாலும் இவற்றை கரூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சூரியகாந்தியை கொள்முதல் செய்வது இல்லை. மேலும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று சூரியகாந்தியை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சிறு விவசாயிகள் பலர் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை தவிர்த்து இடைத்தரகரிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் எதிர்பார்க்கும் விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சூரியகாந்தி சாகுபடி செய்து வரும் விவசாயிகள் சிலர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் பரவலாக சூரியகாந்தி இந்தாண்டு பயிரிடப்பட்டு உள்ளது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் சூரியகாந்தியை நேரடியாக நாங்கள் கொண்டு சென்று விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இடைத்தரர்கள் மூலமாகவே விற்பனை செய்து வருகிறோம். எனவே, போதிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சூரியகாந்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சூரியகாந்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.