ஒரே நாளில் 2,459 வழக்குகள் பதிவு; கரூர் மாவட்ட போலீசார் அதிரடி
Karur News,Karur News Today- விபத்துகள் மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஒரே நாளில் 2,459 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
Karur News,Karur News Today- கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும், விபத்துகளை குறைக்கும் வகையிலும் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள எல்லை பகுதிகளில், சோதனை சாவடிகள், முக்கிய சந்திப்புகளில், ஒரே நாளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டனர். இதில், மொத்தம் 2,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 13 வழக்குகள் நம்பர் பிளேட் இல்லாத மற்றும் போலி நம்பர் பிளேட் வைத்து ஓட்டிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபானம் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாக 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தனிப்படை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இதில், கரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உழைப்பாளி நகர் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த சென்னையை சேர்ந்த தமிழ்செல்வன் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், சென்னை போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகி உள்ள கொலை வழக்கு குற்றவாளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த மீன் வெட்டும் கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் எஸ்பி சுந்தரவதனம் கூறுகையில், குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தினமும் சோதனை நடத்தப்படும். வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனைசெய்யப்படும் என தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களிலும் இது தொடருமா?
கரூரை போல சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு என பிற மாவட்டங்களிலும் போலீசார், இதுபோன்ற அதிரடி திடீர் சோதனைகளை நடத்தினால், ஏகப்பட்ட குற்றவாளிகள் பிடிபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் என பலதரப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனங்களை திருடுபவர்கள், மோசடி பேர்வழிகள், வழிப்பறி திருடர்கள் என, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எளிதாக போலீசாரிடம் பிடிபடுவர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக தற்போது பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன், திருப்பூர் எஸ்.பி ஆக பணிபுரிந்த போது, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய கடை வீதிகளில், மக்களோடு மக்களாக கலந்து, கும்பலோடு சாதாரணமாக நடந்து செல்வார். அப்போது, குற்றவாளிகள் அவரிடம் எளிதாக பிடிபடுவதுண்டு. அதே போல், மதுரையில் எஸ்பி ஆக அவர் இருந்த போது, இரவு நேரங்களில் பைக்கில் உலா வந்து, சமூக குற்றவாளிகளை பிடிப்பது மட்டுமின்றி, கையூட்டு வாங்கும் போலீசார், பணி நேரத்தில், பணியில் இல்லாத போலீசார், மக்களின் புகார்களை அலட்சியப்படுத்தும் போலீசாரையும் அவரே நேரடியாக கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தார்.
இதுபோல, சமூக அக்கறை, கடமை உணர்வு கொண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர் சோதனைகளை, மாவட்டந்தோறும் நடத்தும் பட்சத்தில், குற்றங்கள் வெகுவாக குறையும். விபத்துகள் தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.