கரூர் மாவட்டத்தில், 12 கல்குவாரிகளுக்கு ரூ. 44. 65 கோடி அபராதம்; அதிகாரிகள் அதிரடி
Karur News, Karur News Today- கரூர் மாவட்டத்தில் உள்ள 12 கல்குவாரிகளுக்கு, 44 கோடியே 65 லட்சம் அபராதம் விதித்து, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Karur News, Karur News Today- கரூர் மாவட்டத்தில், தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டாநிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்படும் இனங்களில் அபராத நடவடிக்கைக்கு வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதும் நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குநர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை), சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து இன்றைய தேதி வரை 42 குவாரிகளில் கூட்டுப்புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு, அபராதம் விதிக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
12 இனங்களில் மட்டும் ரூ. 44, 65, 28, 357/- (ரூபாய் நாற்பத்தி நான்கு கோடியே அறுபத்தி ஐந்து இலட்சத்து இருபத்தி எட்டாயிரத்து முன்னூற்றி ஐம்பத்தி ஏழு மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 இனங்களுக்கு அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 12 கல்குவாரிகளுக்கு 44.65 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.