கரூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு
இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது
கரூர் மாவட்டம், புது குறுக்கு பாளையம், கூலக்கவுண்டனூர், கடைவீதி, சுந்தராம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், கொங்கு நகர், பாலத்துறை தேசிய நெடுஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அய்யம்பாளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பெரியார் நகர், பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் சுமார் 23க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
நேற்று காலை3-வது நாளாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டார பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 6.30 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்று தண்ணீரில் இரவு கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான பாதுகாப்பு பணியில் அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ், காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், சுரேஷ், நந்தகோபால் மற்றும், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.