காவிரி ஆற்றில் தத்தளித்த மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தவுட்டுபாளையம் அருகே காவிரி ஆற்றில் தத்தளித்து உயிருக்கு போராடிய மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்;
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உடற் கல்வியியல் கல்லூரியில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் குமார்( 21), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் கணேஷ்(18), அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கமலேஷ் (18), சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தீபன்ராஜ் (20), அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் பெரியமலை (18 ), மலையன் மகன் அரவிந்த் (18 ),ராமர் மகன் அண்ணாமலை( 20 ),தென்காசி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் விமல்ராஜ் (18) ஆகிய 8 பேரும் பயின்று வருகின்றனர்.
இவர்கள் புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் 8 பேரும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக மதியம் சுமார் 1.30 மணி அள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி ஆற்று பாலம் அருகே காவிரி ஆற்று தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விமல்ராஜ் என்பவர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது அவரை தண்ணீர் இழுத்துச் சென்றது. அதனிக் கண்டு கமலேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது மூன்று பேரும் கரைக்கு வர முடியாமல் ஆழமான தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த அந்தப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு விரைந்து சென்று தண்ணீரில் சிக்கிக் கொண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமல்ராஜ், கமலேஷ், அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.