அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

Update: 2023-08-09 11:50 GMT

சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று 3 நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சங்கர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்த ஆவணங்களை அவரிடம் காண்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

2 காரில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் அவரது சகோதரர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

Similar News