வெயில் தாக்கம்: கரூரில் தர்பூசணி, முலாம்பழங்கள் விற்பனை படுஜோர்
கரூர் மாநகர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி, முலாம்பழங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.;
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
நேற்று கரூா் மாவட்டத்தில் 102 டிகிரி அளவில் பதிவாகி உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் குளிர்பானங்களான தர்பூசணி, முலாம்பழம், பழச்சாறு, இளநீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கரூர் மாநகரப் பகுதிகளான தாந்தோணிமலை, சுங்ககேட், காந்திகிராமம் சாலை ஓரங்களில் பல இடங்களில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் விற்பனை செய்யும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர உடலை குளிர்ச்சியாக்கும் கம்மங்கூழ், மோர் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் கரூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தர்பூசணி மற்றும் முலாம்பழங்களை விலை சற்று அதிகமாகவே இருந்தாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி மற்றும் முலாம்பழங்களை பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கரூர் மாநகர பகுதிகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கும், முலாம்பழம் ஒன்று ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.