நலிவடைந்து வரும் கோரைப்பாய் தொழில்: அரசு உதவிக்கரம் நீட்டுமா?
கரூரில் நலிவடைந்து வரும் கோரைப்பாய் தொழிலை மேம்படுத்த அரசு உதவிக்கரம் நீட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.;
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு மாற்றாக கோரை விவசாயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தாங்கள் பயிரிட்டிருந்த நெல், வாழை, கரும்பு விவசாயத்தில் நோய்கள், பூச்சிகள் அதிகமாக தாக்குவதால் லாபம் கிடைப்பதில்லை என்பதால் மழை, கால நிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு விவசாயிகள் தங்களின் சாகுபடியையும் மாற்றி அமைத்துள்ளனர்.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் சோமூர், அச்சமாபுரம், வேடிச்சிப்பாளையம், மரவாப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், நெரூர், முனியப்பனூர், வாங்கல், திருமுக்கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோரைப்பயிர் விவசாயத்தை பொறுத்தவரை ஒருமுறை சாகுபடி செய்து நன்றாக பராமரித்து வந்தால் போதும் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.
6 மாதத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவு அதிகம் இல்லாதது கோரைப்பயிர். இதனால் இந்த பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நோய்கள், பூச்சிகள் அதிகளவில் தாக்காது. தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றது. அதாவது மழை, காற்று, வெயில் உள்ளிட்ட காலங்களில் கோரைப்பயிர் விவசாயத்தில் அதிக பாதிப்பு ஏற்படாது. வேலை ஆட்கள் தேவையும் குறைவு.
கோரைப்பயிர் மூலம் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கான்கிரீட் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரைப்பயிர் பயன்படுகிறது. கோரைப்பயிர் முறையாக களையெடுத்து நாக்குறிஞ்சி என்ற புல் ரகம் உள்ளே வராமல் பராமரித்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். வருடத்திற்கு இரு முறை மகசூல் எடுக்கலாம். காய்ந்த கோரையில் ஒரு கட்டு என்பது 6 முதல் 8 முடி வரை வருவது ஆகும். 1 ஏக்கருக்கு சுமார் 80 கட்டு முதல் 100 கட்டு வரை வரும். சில்லரை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் கோரை விளையும் இடங்களுக்கே வந்து கோரைப்பயிர்களை வாங்கி செல்கிறார்கள்.
ஒரு சில வியாபாரிகள் இந்த கோரையை வாங்கி பாய் மக்கத்திற்கு கொடுத்து அதில் ஒத்தக்கோரை, இரட்டைக்கோரை, ஜக்கார்டு (டிசைன்கள்) மட்டுமில்லாமல் அளவிற்கேற்றவாறு பாய்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இந்த கோரைகளை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி சேலம் மாவட்டம் ஓமலூர், திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு, திருச்சி மாவட்டம் உன்னியூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி மூலம் நெய்து பாய்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 1 கட்டு கோரைப்பயிர் ரூ.1,000 முதல் ரூ.1,150 வரை விற்பனை ஆகிறது. கடந்த காலங்களில் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை 1 கட்டு கோரைப்பயிர் விற்பனையானது. அப்போது விவசாயிகளுக்கு கோரைப்பயிர் லாபகரமாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.1,000 முதல் ரூ.1,150 வரை மட்டும் விற்பனையாவதால் லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள்.
கோரைப்பயிரை அறுத்து அதனை எந்திரம் மூலம் பிரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கியது போக மீதி எதுவும் மிஞ்சாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் வியாபாரிகள் மூலம் தான் கோரைப்பயிரை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரிடையாக விற்பனை செய்ய வழியில்லை. இதனால் அறுவடை காலங்களில் நெல்லுக்கு கொள்முதல் நிலையம் திறப்பது போல், கோரைப்பயிருக்கும் கொள்முதல் நிலையத்தை அரசே திறக்க வேண்டும் என்றும், அப்போது தான் கோரைப்பயிர் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் எனவும், கோரைப்பயிர் சாகுபடி தொழிலை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவாசாயிகள் கூறியதாவது: கோரைப்பயிரில் விவசாயிகளுக்கு வேலை குறைவு. ஆனால் தொழிலாளர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். கோரைப்பயிர் அறுப்பவர்களுக்கு 1 முடிக்கு ரூ.20 வழங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 15 முதல் 20 முடி வரை அறுப்பார்கள். தொடர்ந்து மிஷினில் இரண்டாக கிழித்து 2 நாட்களுக்கு காய வைத்து கட்டி வைப்பார்கள். நன்றாக பராமரித்தால் லாபம் கிடைக்கும். கோரைப்பயிர்களை சேமித்து வைப்பதற்கு குடோன் எதுவும் இல்லை. கோரைப்பயிர்களுக்கு கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். பாய் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால்கூட நன்றாக தான் இருக்கும். ஏனென்றால் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்பயிர்தான் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு தற்போது லாபம் இல்லை. வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கு தான் லாபம் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில், கோரைப்பயிர் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும்.
சோமூர், நெரூர் பகுதிகளில் முழுவதும் கோரைப்பயிர் விவசாயம் தான் செய்கிறார்கள். கோரைப்பயிர் இரண்டாக கிழிப்பதற்கு எந்திரம் வேண்டும். அந்த இயந்திரம் ரூ.70 ஆயிரத்துக்கு வாங்க வேண்டும். இல்லையென்றால் இயந்திரம் வாடகைக்கு எடுத்தால் 1 கட்டுக்கு ரூ.150 வழங்க வேண்டும். அரசு சார்பில் இயந்திரம் வாங்குவதற்கு கடன் வழங்கினால் நன்றாக இருக்கும். அதைபோல் கோரைப்பயிர் சாகுபடி செய்தவற்கு கடன் உதவி செய்து கொடுத்தால் உதவிகரமாக இருக்கும்.
நெல், கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் கடன், மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் கோரைப்பயிர் பயிரிடும் எங்களுக்கு எந்தவிதமான கடன் மற்றும் மானியம் அரசு சார்பில் கொடுப்பதில்லை. மேலும் நோய் தாக்குதல், தண்ணீர் இல்லாமல் காய்ந்து போவதற்கு நஷ்ட ஈடு வழங்கினால் நன்றாக இருக்கும். கோரைப்பயிரில் லாபம் இருக்கிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது கோரைப்பயிர் விவசாயம் கடினமாக இருக்கிறது. என்று கூறினர்