மணல் சேமிப்பு கிடங்கில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
மணலை லாரிகளுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு கிடங்கை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர்புதூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டு, இங்கிருந்து லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மணல் மாட்டு வண்டிகளுக்கு உள்ளூர் தேவைகளுக்காக மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் நன்னியூர்புதூர் கிராமத்தில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் உள்ள மணலை லாரிகளுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நன்னியூர்புதூர் அரசு மணல் சேமிப்பு கிடங்கில் திரண்டனர்.
50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் கிடங்கை முற்றுகையிட்டு, சேமிப்பு கிடங்கில் உள்ள மணலை மாட்டு வண்டிகளுக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையடுத்து அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.