சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருது
கரூா் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருது வழங்கப்பட்டது.;
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு முதல் பரிசும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு இரண்டாம் பரிசும், இந்தியன் வங்கிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
2021 - 22ஆம் ஆண்டு அதிகளவில் மகளிர் திட்ட சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதில் மாவட்ட அளவில் முதல் பரிசு குளித்தலை இந்தியன் வங்கிக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றுகளும், இரண்டாம் பரிசு பஞ்சமாதேவி இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு ரூ.10ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றுகளும், மூன்றாம் பரிசு கரூா் எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினார். மேலும் 2021- 22 ம் ஆண்டில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய 15 வங்கிக் கிளைகளுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினார்.
நிகழ்வில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் ஜார்ஜ் பாபு லாசா், திட்ட இயக்குநா் (மகளிர் திட்டம்) சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மணிகண்டன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.