பரந்தூர் பகுதி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

பசுமை விமான நிலையத்தை எதிர்க்கும் பரந்தூர் பகுதி மக்கள் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.;

Update: 2023-09-28 14:11 GMT

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு நேரங்களில் நடைபெறும் போராட்டத்தின் 429 வது நாளின் அறிவிப்பு பலகை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை ஒருங்கிணைத்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்,  நீர் நிலைகள் , குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் சுமார் 4900 ஏக்கர் கையகப்படுத்த  திட்டமிடப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே விவசாய நிலங்களை தர மாட்டோம் என கூறி 13 கிராமங்களை ஒருங்கிணைத்த எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் போராட்டங்கள், சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டங்கள், மொட்டை அடித்து பட்டை நாமம் போட்டு போராட்டம், கிராம சபையில் அரசுக்கு எதிரான தீர்மானம், கிராம சபை புறக்கணிப்பு, கோட்டையை நோக்கி போராட்டம் என பல கட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட கிராம பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இணைந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் கடந்த மாதத்தில் கையகப்படுத்த படவுள்ள பகுதிகள் குறித்து ஆய்வு நடத்த வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை அறிந்த போராட்ட குழு வரும் ஞாயிறன்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News