அரசு வீடு கட்டும் திட்டத்தில் சேமித்து வைக்கபட்ட கம்பிகள்: அதிகாரிகள் சரிபார்ப்பு
இரும்பு கம்பிகளை வைத்துள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தவறு நேர்ந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுகிறது. இதன் கீழ் சுமார் 274 கிராம ஊராட்சிகள் உள்ளது.
இந்த ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் மத்திய, மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 104 மூட்டை சிமெண்ட் மற்றும் 320 கிலோ எடை கொண்ட கம்பிகள் அரசு மானியம் மூலம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கம்பிகள் அனைத்தும் ரயில்வே நிலையம் அருகில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இருப்பு வைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளில் பல ஆயிரம் கிலோ எடைகொண்ட கம்பிகள் மாயமானதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொறுப்பிலிருக்கும் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்ட கம்பிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் எடை மிஷின் கொண்டு எடையை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏழை , எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய கம்பிகளை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறுதியில் மட்டுமே காணாமல் போன எடையளவு எவ்வளவு என தெரியவரும் அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு பொருட்களை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பு வைத்ததும் , பாதுகாப்புக்கு உரிய காவலாளியை நியமிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.